நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (நவம்பர் 28) பதவி பிரமாணம் ஏற்ற பிரியங்கா காந்தி அணிந்திருந்த கேரளா சேலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த மாதம் நடந்து முடிந்த வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் அவர் இன்று பதவி பிரமாணம் ஏற்பதற்காக கேரளா கசவு சேலை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இது நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை மட்டும் அல்ல, ஊடகங்கள் மூலம் அவரை பார்த்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதுமட்டுமல்லாமல் அவரது உடை, இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், பிரியங்கா காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தியை மக்களுக்கு ஞாபகப்படுத்தியது. ஏன் என்றால் இந்திரா காந்தியும் பாரம்பரியமான சேலைகளை அணியும் வழக்கம் கொண்டவராக இருந்தார்.
அது என்ன கேரள கசவு சேலை?
கேரள மக்கள் கல்யாணம், கோவில் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு தங்கம் நிற பார்டர் கொண்ட வெள்ளை சேலைகள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ‘கசவு சேலை’ என்ற பதத்தில் உள்ள ‘கசவு’ என்பது சேலையில் உள்ள தங்க நிற பார்டருக்காக பயன்படுத்தப்படும் நூலை குறிக்கிறது.
இதை ‘ஜாரி’ என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் இதை ‘ஜரிகை’ என்று குறிப்பிடுவார்கள். இந்த தங்க நிற பார்டர் கொண்ட சேலையைத்தான் பிரியங்கா காந்தி இன்று பதவியேற்கும் போது அணிந்திருந்தார்.
கேரளாவில் பல இடங்களில் கசவு சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. எனினும் பிரபலமான மூன்று இடங்கள் உள்ளன. அவை பலராமபுரம், செண்டமங்கலம் மற்றும் குதம்புல்லி ஆகும்.
பலராமபுரம் சேலைகள் திருவனந்தபுரம் அருகே தயாரிக்கப் படுகிறது. இதை தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஷாலியார் இனக்குழு தயாரிக்கிறது. இவர்களை அப்போதைய திருவனந்தபுரம் அரசு குடும்பத்தினர் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இவர்கள் தயாரிக்கும் சேலைகள் சுத்தமான ஜாரிக்காக (தங்கம் பூசப்பட்ட வெள்ளி நூல்கள்) புகழ்பெற்றது.
செண்டமங்கலத்தில் தயாரிக்கப்படும் சேலைகள் பலராமபுரத்தை விட சற்று சொரசொரப்பான ஜாரிகளை கொண்டு தயாரிக்கப்படுபவை.
மூன்றாவது குழுமமான கூதம்புல்லி குழுவும் ஜாரிகள் கொண்ட வெள்ளை சேலைகளை தயாரிப்பார்கள். ஆனால் இவர்களது சேலைகளில் மனித உருவங்கள் உள்ளிட்ட டிசைன்கள் இடம்பெற்றிருக்கும். இதை தயாரிப்பவர்கள் தேவாங்கா என்று அழைக்கப்படுகிறார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இந்தியா வரவில்லையென்றால்… பிரம்மாஸ்திரதை கையில் எடுத்த பாகிஸ்தான்!
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் : உதயநிதி பங்கேற்பு!
’நான் நயன்தாராவுடன் துணை நிற்பேன்!’ – நடிகை பார்வதி