கர்நாடகாவில் சாலை பேரணியின் போது தடைகளை தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் தார்வாட் நகரில் இன்று தேசிய இளைஞர்கள் திருவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தார்வாட் விமான நிலையம் வந்தடைந்தார்.
தார்வாட் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அவர் பேரணியாக சென்றார்.
பிரதமரை காண சாலையின் இரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி இருந்தனர். சாலையில் பேரணியாக வந்த பிரதமர் மீது பொதுமக்கள் மலர்களை தூவி பிரதமர் வாழ்க என முழக்கமிட்டு வந்தனர்.
அப்போது பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரதமரை சுற்றி எஸ்பிஜி சிறப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பிரதமர் சாலை வழியாக பேரணியாக வந்த போது திடீரென தடைகளை தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமர் அருகே சென்று அவருக்கு மாலை அணிவித்தார்.
அப்போது காவல்துறையினர் இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி இளைஞர் பிரதமர் வாகனத்தின் அருகே சென்று அவருக்கு மாலை அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமருக்கு மாலை அணிவித்த இளைஞரை போலீசார் தற்பொழுது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கலை.ரா