தமிழ்நாட்டிற்கு தண்ணீர்: பாஜக கோரிக்கையை நிராகரித்த கர்நாடக அரசு

Published On:

| By christopher

karnataka release 10 tmc water to tamilnadu: dK shivakumar

பாஜகவின் கோரிக்கையை நிராகரித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று(ஆகஸ்ட் 15) தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும்.

ஆனால்,  தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு வழங்க தொடர்ந்து மறுத்து வருவதால் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் பேரில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம், எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசின் சார்பில், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். அப்போது, தமிழ்நாடு மற்றும்  கர்நாடக அரசின் பிரதிநிதிகள் இடையே தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில்  தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்த நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனாலும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனையடுத்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியபடி,  38 டி.எம்.சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

பாஜக முன்னாள் முதல்வர் கடிதம்

இதற்கிடையே கர்நாடகாவின் 4 அணைகளில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டாமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை  நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் “கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. அதனால் எங்களிடம் போதிய தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என விளக்கம் அளித்தார்.

Image

இந்த நிலையில், “நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று காலை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும் போது, ”தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

மேகதாது அணை இருந்திருந்தால் தமிழ்நாடு எதிர்பார்க்கும் தண்ணீரை  இப்போது திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேகதாது அணை இருந்தால் இரு மாநிலங்களின் நீர் தேவையும் பூர்த்தி ஆகும்” என டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

நேற்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பசவராஜ் பொம்மையின் கடிதத்தை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என கூறியிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தண்ணீர் திறந்துவிட உள்ளதாக கூறியுள்ளது, பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக கருதப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!

6ஜி நோக்கி இந்தியா : மோடி பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.