கர்நாடகா மாநில காவல்துறை, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநில காவல்துறையின் 38,347 இணைப்புகள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஜியோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது “காவல்துறை போன்ற அவசர சேவைக்கு நெட்வொர்க்கின் செயல்திறனை அதிகரிப்பது முக்கியமான ஒன்று. இந்த 38,000 இணைப்புகளில் பெரும்பாலானவை தொலைதூர கிராமப்புறங்களில் உள்ளன. அங்கு அதிகாரிகள் நல்ல நெட்வொர்க் கவரேஜ் இல்லை என்று புகார் கூறுகின்றனர்.

போலீசார் தங்கள் மொபைல் போன்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரவு வேகம் மெதுவாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. அவசரத்திற்கு பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் பொதுச்சங்க செயலாளர் குண்டண்ணா கூறும்போது, “இந்திய ரயில்வே மற்றும் தெலுங்கானா காவல்துறை உட்பட பல மத்திய அரசு துறைகள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு மாறுமாறு அரசு உத்தரவிட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனத்தை (PSU) மூடிவிட்டு தனியார் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் செயல்படுகிறது.மத்திய அரசு பிஎஸ்என்எல் 4G சேவைகளை வழங்க அனுமதிக்கவில்லை. அரசாங்கமே 5G அலைக்கற்றையை திட்டமிட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்