Karnataka High Court rejects DK Shivakumar plea to erase CBI fir

கர்நாடக துணை முதல்வர் சொத்துகுவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அரசியல் இந்தியா

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சிபிஐ பதிந்த சொத்துகுவிப்பு  வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) மறுத்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தற்போதைய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகமும் அதன் விசாரணையைத் தொடங்கியது.

வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் அனுமதி கோரியது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ).

விசாரணைக்கான அனுமதியை அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு செப்டம்பர் 25, 2019 அன்று வழங்கப்பட்டது.

அதன்படி டி.கே.சிவகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய்  சொத்து சேர்த்ததாக சிபிஐ அக்டோபர் 3, 2020 அன்று வழக்குப்பதிவு செய்தது.

வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகம் தனித்தனியாக நடத்திய விசாரணையில் குற்றசாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து,  சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கிய மாநில அரசின் முடிவை எதிர்த்து சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிவக்குமார் தலைமை நீதிபதி பிபி வரலே மற்றும் நீதிபதி எம்ஜிஎஸ் கமல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் மேல் முறையீடு செய்தார்.

அதில் கடந்த ஜூன் மாதம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

டிவிஷன் பெஞ்ச் தடை உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

எனினும் தடை உத்தரவில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், அதற்குப் பதிலாக மேல்முறையீடு மற்றும் வழக்கில் தொடர்புடைய விஷயங்களை விரைவாகத் தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி  கே.நடராஜன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது சட்டப்பூர்வமானது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி,

சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் வழக்கு விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை அடுத்த 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சிவகுமாருக்கு ஏதேனும் புகார் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகுமார் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அரசு இயந்திரமா, திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா?: அண்ணாமலை கேள்வி!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கிறீர்களா?: உங்கள் கவனத்திற்கு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *