காவிரி ஆற்றில் இருந்து தினமும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று (ஆகஸ்ட் 29) கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக 23வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 24ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் வழக்கம்போல் இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 47 சதவீதம் அளவுக்கு நீர் பற்றாக்குறை உள்ளதாகவும், 4 அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், இப்போது அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது என்றும் கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மழை பொழிவு, அணையில் உள்ள நீரின் அளவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அடுத்த 15 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 12-ம் தேதி வரை 5,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எஸ்.கே.கல்தர் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவையும் ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைகிறது!
விக்கிரவாண்டி டோல்கேட்: உயரும் சுங்ககட்டணம்!