காவிரி நீர்: கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு!

Published On:

| By christopher

karnataka govt filed a plea

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று (செப்டம்பர் 20) மனு அளித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது.

இதனையடுத்து 2 ஆவது கட்டமாக அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டது.

எனினும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

அத்துடன் காவிரி நீர் தொடர்பாக அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், மழை இல்லாததன் காரணமாக கர்நாடகா பயன்பாட்டிற்கே போதிய அளவில் நீர் இல்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பது என்பதில் சாத்தியமில்லை.

இந்த நிலையில் அம்மாநிலத்திற்கு அடுத்த 15 நாட்களில் வினாடிக்கு  5,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில்,

தங்களது மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்

முதல் பாகிஸ்தானிய அழகி… யார் இந்த எரிகா ராபின்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.