கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேப்பிடோ செயலிகளின் வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள அம்மாநில அரசு அடுத்த 3 நாட்களுக்குள் நிறுவனங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நகரமயமாதலால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற செயலிகளின் வாடகை ஆட்டோக்கள் மக்களுக்கு உதவியாக உள்ளன.
நேரடியாக வாடகை ஆட்டோக்களை அணுகும் போது கேட்கப்படும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்துக்கு இந்த நிறுவனங்கள் சேவையை வழங்குவதால் நாளுக்கு நாள் இந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆனால், கர்நாடகாவின் On-Demand transportation act 2016-ன் படி ஓலா, ஊபர், ரேப்பிடோ செயலிகள் டாக்ஸி சேவையை அளிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.
டாக்ஸி என்பது ஓட்டுநருடன் சேர்ந்து 7 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையிலான கார் என அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
2 கிலோ மீட்டருக்கு 115 ரூபாய்?
ஆனால் சட்டத்திற்கு புறம்பாக ஓலா, ஊபர் மற்றும் ரேப்பிடோ நிறுவனங்கள் ஆட்டோ சேவையையும் சேர்த்து வழங்கி வருகின்றன.
இது மட்டும் அல்லாமல் இந்த நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் புகார்கள் குவிய தொடங்கியுள்ளன.
அரசு விதிகளின் படி வாடகை ஆட்டோக்கள் முதல் 2 கிலோ மீட்டருக்கு 30 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா 15 ரூபாயும் வசூலிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த 6 முதல் 8 மாதங்களாக வாடகை ஆட்டோக்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 முதல் 115 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இது தொடர்பாக 292 புகார்கள் வந்துள்ளதாக அம்மாநில போக்குவரத்துத்துறை ஆணையர் THM குமார் தெரிவித்துள்ளார்.
ஓலா, ஊபருக்கு போட்டியாக நம்ம யாத்ரி!
ஓலா, ஊபர், ரேப்பிடோ ஆட்டோக்களுக்குப் பதிலாக புதிய மாற்று வழியை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக நம்ம யாத்ரி என்கிற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்த பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த செயலி நவம்பர் 1-ம் தேதி அன்று பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் ராஃபிக்
வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்வீட்: எச்.ராஜாவை விசாரிக்க உத்தரவு!