கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்திற்கான தற்போது உள்ள ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது.
அடுத்த சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதாதளம் ஆகிய கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும், ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளும் மற்றும் கர்நாடக தேர்தலையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று ஆம் ஆத்மியும் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெறும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம் தான். இதனால் இங்கு ஆட்சியை தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகத்திற்கு வந்து பாஜகவிற்காக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
பிரதமர் மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா