கர்நாடகா மாநிலத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக பிச்சைக்காரர் ஒருவரை தம்பதி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ‘ஹாசன் ஹோஸ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி கவுடா. சொந்தமாக தொழில் செய்தார். இவருக்கு ஷில்பாராணி என்ற மனைவி உண்டு. இதனிடையே கடந்த 13ஆம் தேதி அதிகாலை முனிசாமி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பஞ்சரான கார் டயரை மாற்றும்போது லாரி மோதி, முனிசாமி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற ஷில்பாராணி விபத்தில் இறந்தது தன் கணவர் தான் என்று உறுதி செய்து கதறி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து இறுதி காரியமும் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அனைவருமே முனிசாமி உயிரிழந்துவிட்டார் என்று நம்பி விட்டனர். ஷில்பாவும் கணவர் இறப்புக்கு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார்.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் முனிசாமி உயிரிழந்தது விபத்தில் இல்லை. கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசார் உஷார் ஆனார்கள். பிறகுதான் உயிரிழந்தது முனிசாமியே இல்லை. அது வேறு நபர் என்பது தெரிய வந்தது.
பின்னர், விபத்தை ஏற்படுத்தியதாக தேவேந்திர நாயக் என்பரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இன்சூரன்ஸ் பணத்தை மோசடி செய்ய முனிசாமி போலவே இருக்கும் ஒருவரை தேடியுள்ளனர். அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்த ஒருவரை பிடித்து கடத்தி சென்று கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
பின்னர், போலியாக விபத்தை ஏற்படுத்தி அந்த இடத்தில் பிச்சைக்காரரின் உடலை போட்டுள்ளனர். இதற்கு , முனிசாமியின் மனைவி ஷில்பா ராணியும் துணையாக இருந்துள்ளார். பல கோடிக்கு முனிசாமி இன்சூரன்ஸ் செய்துள்ளார். கடன் நெருக்கடியில் இருந்ததால், அந்த பணத்தை மோசடியாக பெற , கொலை வரை சென்றுள்ளனர். தற்போது, முனிசாமி, ஷில்பாராணி, தேவேந்திர நாயக் ஆகியோர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
யாருக்கு யார் அடிமை? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
ரஜினி தான் என் துரோணாச்சாரியார்… கன்னட நடிகர் உபேந்திரா