அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் டிரம்பை விட மிக பின் தங்கியிருந்த கமலா ஹாரிஸ், தற்போது விறுவிறுவென முன்னேறி 210 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வென்று அதிபர் பதவியில் அமர்வதற்கு 270 தேர்தல் வாக்குகள் தேவை என்ற நிலையில், அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று அதிகாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.
இதனையடுத்து உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
காலை 7 மணி நிலவரப்படி டிரம்ப் 95 தேர்தல் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், கமலா வெறும் 35 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
அதன்பின்னர் காலை 9.15 மணி நிலவரப்படி டிரம்ப் 210 தேர்தல் வாக்குகளை பெற்று தனது முன்னிலையை தொடர்ந்த நிலையில், கமலா ஹாரிஸ் 112 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தற்போது அலபாமா, புளோரிடா, இண்டியானா, டெக்சாஸ், கென்டகி, மிசோரி உள்ளிட்ட 25 மாகாணங்களில் வென்று, 246 தேர்தல் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
மிகவும் பின் தங்கியிருந்த கமலா ஹாரிஸ் தற்போது படிப்படியாக முன்னேறி வாஷிங்டன், ஒரேகான், கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, ஹவாய் உள்ளிட்ட 19 மாகாணங்களை வென்று 210 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் 7 மாகாணங்களில் நார்த் கரோலினோவில் டிரம்ப் வென்றுள்ளார்.
மேலும் பென்சில்வேனியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்ஸின், மிச்சிகன், ஜியார்ஜியா உள்ளிட்ட 6 மாகாணங்களில் அவர் முன்னிலையிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
அமெரிக்காவில் யார் அதிபர் தேர்தலில் வென்றாலும் 7 ஸ்விங் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவது மிக மிக அவசியமாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு தான் அதிகபட்சமாக 19 தேர்தல் வாக்குகள் உள்ளது.
அதன்படி இரு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் கீ ஸ்டோன் மாநிலம் என்று செல்லப்பெயர் பெற்ற பென்சில்வேனியாவில் அதிக கவனம் செலுத்தினர்.
எனினும் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி டிரம்ப் 51.2 சதவீத வாக்குகளை பெற்று கமலா ஹாரிசை (47.8%) விட அங்கு முன்னிலையில் உள்ளார்.
எனவே டிரம்ப் பென்சில்வேனியாவில் வெல்லும் பட்சத்தில் அவரே அமெரிக்காவின் அதிபர் ஆவது உறுதி என்கின்றனர் தேர்தல் வல்லுநர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?
தடைகளை உடைத்து செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் : ஸ்டாலின்