கல்பனா சாவ்லா பலியாகி 22 ஆண்டுகள்… எப்படி நடந்தது அந்த துயரம்?

Published On:

| By Kumaresan M

ஹரியானா மாநிலத்தில் 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கர்னால் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு குழந்தைகளில் இவர்தான் கடைசி. சாதாரண நடுத்தர குடும்பம். தந்தை வியாபாரம் செய்து வந்தார். குழந்தையில் இருந்து விமானம் என்றாலே கல்பனாவுக்கு தனி ஈர்ப்பு.

அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு, விண்வெளி வீராங்கனை ஆக வேண்டுமென்பது மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியரிங் படித்தார்.

1982 ஆம் ஆண்டு இன்ஜீனியரிங் பட்டம் பெற்ற பிறகு, 1984 ஆம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், கொலரோடோ பல்கலையில் மேற்படிப்பு படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்த சமயத்தில்தான் நாசாவின் விண்வெளி பயிற்சிக்கும் தேர்வானார். விண்ணப்பித்த 3 ஆயிரம் பேரில் தேர்வான 6 பேரில் கல்பனாவும் ஒருவர்.

1995ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக மாறினார். தொடர்ந்து, 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி விமானமான எஸ்.டி.எஸ்-87 மூலம் முதன் முதலில் விண்வெளியில் பயணித்தார்.

இரண்டாவதாக அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்கி கொண்டிருந்தனர். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது.

விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தபோது வெப்பத்தை தாங்கும் தகடுகள் உடைந்து போனதால் அதிக வெப்பம் காரணமாக விண்கலம் வெடித்து சிதறியது. இந்த வெப்பத்தை உணரகூட முடியாத நிலையில், கல்பனா மற்றும் அவருடன் பயணித்த மற்ற 6 விண்வெளி வீரர்களின் மரணம் இருந்திருக்கும் என்று பின்னர் சொல்லப்பட்டது. இன்றுடன் கல்பனா விண்ணில் கலந்து 22 ஆண்டுகள் ஆகின்றன.

கல்பனா மரணிக்கும் போது அவருக்கு 41 வயதுதான் ஆகியிருந்தது. வீர தீர சாதனைகள் செய்யும் பெண்களுக்கு இவரின் பெயரில்தான் கல்பனா சாவ்லா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

கல்பனா போலவே சுனிதா வில்லியம்சும் இந்திய வம்சவாளி விண்வெளி வீராங்கனைதான். இவர், விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்து சாதனை படைத்த முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி கூடத்தில் இவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற சுனிதாவையும் மற்றொரு விண்வெளி வீரரான பட்ச் வில்மோரையும் அங்கிருந்து மீட்கும் பணி சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share