இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்றனர்.
காலை 10.05 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
விமானத்திலிருந்த வலதுபக்க எமர்ஜென்சி கதவு திறந்ததால், பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் சோதனைக்கு உட்பட்ட பிறகு புறப்பட்டுச் சென்றது.
இந்த எமர்ஜென்சி கதவை விமானத்தில் பயணித்த தேஜஸ்வி சூர்யா திறந்தார் என பயணிகள் கூறினர். அப்போதே அவர் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டதுடன், எழுத்துப்பூர்வமாகவும் விமான குழுவினருடன் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வு நடந்து ஒரு மாதம் 7 நாட்களுக்குப் பிறகு நேற்று விமான போக்குவரத்துத் துறை ஆணையரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 18) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எம்ர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது குறித்து பேசினார்.
எமர்ஜென்சி கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யாதான் என உறுதி செய்த ஜோதிராதித்ய சிந்தியா, “கவனமாக இருப்பது அவசியம். இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தேஜஸ்வி சூர்யாவே விமான குழுவினருக்கு தெரிவித்துவிட்டார்.
டிஜிசிஏவின் நெறிமுறை பின்பற்றப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கு பிறகே விமானம் புறப்பட்டது. இந்த தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்” என்று கூறினார்.
பிரியா
நீட் தேர்வு விலக்கு: முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!
மூன்று மாநில சட்டபேரவை தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!