சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று (நவம்பர் 18) பரிந்துரை செய்துள்ளது.
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல் வரும் நவம்பர் 21ஆம் தேதி அன்று ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்து ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலீஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் “நீதிபதி டி. கிருஷ்ணகுமார் 2016 ஏப்ரல் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் வரும் 21 மே 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன்பு, அவர் உயர் நீதிமன்றத்தில் சிவில், அரசியலமைப்பு மற்றும் சேவை விஷயங்களில் விரிவான பயிற்சி பெற்றிருந்தார். அவர் சிறந்த சட்ட நுணுக்கத்துடன் கூடிய திறமையான மற்றும் நேர்மையான நீதிபதி.
எனவே, நவம்பர் 21 அன்று நீதிபதி சித்தார்த் மிருதுல் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைக்கிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் இல்லை… திருமா ஓபன்டாக்!
அவள், இவள்…. ஜோதிகாவை வறுத்து எடுக்கும் சுசித்ரா