உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் இன்று (மே 19) பதவி ஏற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளன. சமீபத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதால், நீதிபதிகளின் பணியிடங்கள் 32ஆக குறைந்தது. அடுத்தடுத்து மேலும் சில நீதிபதிகள் ஓய்வு பெற இருக்கின்றனர்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலிஜியம், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிரஷாந்த் குமார் மிஷ்ரா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை பரிந்துரை செய்தது.

இதற்கு மத்திய சட்டத்துறையும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று பிரஷாந்த் குமார் மிஷ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
யார் இந்த கே.வி.விஸ்வநாதன்?
நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆரம்ப கால பள்ளி படிப்பு முதல் சட்டப்படிப்பு வரை தமிழகத்தில் பயின்றார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வசித்து வந்த கே.வி.விஸ்வநாதன், பொள்ளாச்சி ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி, அமராவதிநகர் சைனிக் பள்ளி மற்றும் ஊட்டியில் உள்ள சூசையப்பர் பள்ளியில் பயின்றார்.
இவரது தந்தை கே.வெங்கட்ராமன் உச்ச நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இந்நிலையில் சட்டம் பயில ஆர்வம் காட்டிய கே.வி.விஸ்வநாதன் கோவை சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டம் பயின்றார்.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் தனது தொழில் பயணத்தை தொடங்கினார். 1988ஆம் ஆண்டு டெல்லிக்கு புறப்பட்டார்.
டெல்லியில் அதிகம் தமிழ் பேசும் பகுதியான ஆர்.கே.புரத்தில் உள்ள வீட்டு வசதி சங்க வீடுகளில் செக்டர் 1ல் தனது நண்பருடன் 200 ரூபாய் மாத வாடகைக்கு தங்கினார்.
அந்த பகுதியில் இருக்கும் முருகன் கோயில் அருகே உள்ள மகாலிங்கம் மெஸ்ஸில் தான் உணவு சாப்பிடுவார். பின்னர் ஆர்.கே.புரத்தில் இருந்து முகமதுபூர் கிராமத்திற்கு மாறினார். அங்கு மூன்று பேர் ஷேர் செய்யும் அறையில் வசித்து வந்தார்.

மூத்த வழக்கறிஞர்களிடம் ஜுனியராக சேர்ந்தார். முதலில், ராமஜென்மபூமி வழக்கில் ராமருக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.வைத்தியநாதனிடம் ஜூனியராக சேர்ந்தார்.
1988 முதல் 90 வரை வைத்தியநாதனிடம் ஜூனியராக இருந்த கே.வி.விஸ்வநாதன் 1990-95 வரை மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனியராக பணியாற்றினார்.
1988ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதவி செய்து ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2009ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆனார். 2013 ஆம் ஆண்டின் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்தார்.
கலைஞருக்கு மொழிபெயர்ப்பாளர்
சுவாரஸ்யமாக, கே.வி.விஸ்வநாதன் எதிர்தரப்பு மனுதாரருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்துள்ளார். அந்த எதிர்தரப்பு மனுதாரர் வேறு யாரும் இல்லை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்த கலைஞர்தான்.
1991 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகொலை செய்யப்பட்டபோது, கொலைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டறிய நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஜெயின் கமிஷன் விசாரணையின் போது கலைஞர், வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் ஆஜரானார்கள். அதிமுக சார்பில் வழக்கறிஞராக கே.வி.விஸ்வநாதன் ஆணையத்தில் ஆஜரானார்.
அப்போது அரசியல் தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் கலைஞர் தமிழில் பேச ஆரம்பித்ததும், நீதிபதி ஜெயினுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
உடனே நீதிபதி ஜெயின், கே.வி.விஸ்வநாதனை பார்த்து, “அவர் பேசுவதை எனக்கு மொழி பெயர்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அதற்கு விஸ்நாதன், நான் எதிர்தரப்பு, அதாவது அதிமுக சார்பில் ஆஜராகியிருக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஜெயின், “கே.வி.விஸ்வநாதன் மொழி பெயர்ப்பதில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
யாரும் எந்த பிரச்சினையும் எழுப்பாததால், கலைஞர் சொன்னதை மொழி பெயர்த்தார் கே.வி.விஸ்வநாதன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக இருக்கும் கே.வி.விஸ்வநாதன் பல முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் அமிக்கஸ் கியூரியாக (நீதிமன்றத்தின் நண்பர்) இருந்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை வழக்குகளில் வாதாடியுள்ளார்.
தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய ஆதாரை எதிர்த்த வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார் கே.வி.விஸ்வநாதன்.
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஸ்வநாதன் அமிக்கஸ் கியூரியாக செயல்பட்டார். இவ்வழக்கில் “ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று வாதிட்டார். தன் பாலின திருமணம் தொடர்பான வழக்கில் வாதாடினார். அதுபோன்று தனது கருத்தை வெளிப்படையாக சொல்லக் கூடியவர்.
அரசுக்கு எதிராக பேசியதற்காக முன்னாள் நீதிபதிகளை, தேச விரோதிகள் என்று சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜுஜு கூறியிருந்தார். அதற்கு கே.வி.விஸ்வநாதன், கேள்வி கேட்டால் தேச விரோதியா என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இப்படி பல முக்கிய வழக்குகளில் வாதாடியவர் இன்று நீதிபதியாகியுள்ளார். உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள் பட்டியலில் விஸ்வநாதன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதுபோன்று சீனியாரிட்டி படி பார்த்தால் நீதிபதி ஜே.பி.பர்திவாலா வரும் 2030 ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறும் போது, நீதிபதி கே.வி. விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2031 மே 25 ஆம் தேதி வரை 9 மாதங்கள் அந்தப் பொறுப்பில் இருப்பார்.
தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதி பதவி வரை செல்லவிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
முன்னதாக, தமிழகத்தில் இருந்து எம்.பதஞ்சலி சாஸ்திரி 1951 முதல் 1954 வரை தலைமை நீதிபதியாக பணியாற்றினார், 2013ல் தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் தலைமை நீதிபதியாக சுமார் ஒன்பது மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
அவர்கள் வரிசையில் தமிழகத்தில் இருந்து 3ஆவது தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல இருக்கும் கே.வி.விஸ்வநாதனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
பிரியா
திரும்ப பெறப்படும் ரூ.2000 நோட்டுகள்!
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற்றது ஏன்? ஆர்பிஐ விளக்கம்!