வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜே.பி.சி ஒப்புதல்!

Published On:

| By christopher

waqf jpc

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று (ஜனவரி 27) ஒப்புதல் அளித்துள்ளது.

மசூதிக்காக முஸ்லிம்கள் வழங்கிய சொத்துகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்கள் நிா்வகித்து வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. இந்த ஆய்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென கடந்த 24ஆம் தேதி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அவசர அவசரமாக ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து திமுக ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்து குழுவின் தலைவா் ஜெகதாம்பிகா பால் உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை கேலிக்கூத்து எனவும், நேர்மையான முறையில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் கூடியது. அப்போது இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டுவந்த பல்வேறு பரிந்துரைகளை நிராகரித்ததுடன், அவர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை இறுதி செய்யப்பட்டதாக ஜெகதாம்பிகா பால் அறிவித்துள்ளார். மேலும் வரும் 29ஆம் தேதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share