உத்ராகன்ட் மாநிலம் ஜோஷிமத் நிலச்சரிவு மற்றும் பேரிடர் ஏற்பட்டிருக்கக் கூடிய விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.
உத்ராகன்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத். இங்கு நிலச்சரிவு, வீடுகள் புதைந்து போவது, வீடுகளில் விரிசல் என பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோஷிமத் நகரில் இருந்து சுமார் 60குடும்பங்கள் தற்காலிக மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

உத்ராகன்ட் மாநில முதல்வரும் நேரில் ஆய்வுநடத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படுகின்றது.
இதற்கிடையில் சுவாமி அவிமுக்கு தேஸ்வரானந்தா சரஸ்வதி என்ற மதத்தலைவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஜோஷிமத் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் உடனடியாக மாற்று வீடு, நிதி உதவி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் இந்த பேரிடருக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை இன்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, நாட்டில் உள்ள அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக வரவேண்டும் என்று அவசியம் இல்லை என்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களது கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்லலாம் என்றும் அதற்காகத்தான் இத்தகைய விவகாரங்களை அரசு கையாள்கிறது என்றும் நீதிபதி கூறினார்.
அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும் வரும் 16ம் தேதி மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
கலை.ரா