ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்ட்டாஸ் என்ற கனிமப் பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2023 முதல் மிகவும் புகழ்பெற்ற தங்கள் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் விற்பனையை இந்தியா உட்பட உலக அளவில் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.
டால்கம் பவுடர் தொடர்பாக ஆயிரக்கணக்கான நுகர்வோர் வழக்குகளை தொடர்ந்த நிலையில் , இந்த முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்.
இனிமேல் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்புக்கு மாறப்போவதாக கூறியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகின்ற நிறுவனம்தான் ஜான்சன் அண்ட் ஜான்சன்.
கடந்த 136 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் தயாரிப்புகளில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டால்கம் பேபி பவுடர் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக திகழ்கிறது.
ஒரு காலத்தில் தாய்மார்களின் அமோக ஆதரவை பெற்ற தயாரிப்பு அது. அதனைத்தான் அடுத்த ஆண்டு முதல் விற்பனை செய்யப் போவதில்லை என ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டிலேயே ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது பேபி டால்க் பவுடரை அமெரிக்காவிலும், கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மானிய விலையில் பாரம்பரிய விதை நெல்கள்: அமைச்சர் வேண்டுகோள்!