அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் அதிபர் ரேஸில் இருக்கிறார்கள். இதனால் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
இந்தநிலையில், கடந்த ஜூலை 14-ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல தலைவர்களும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஜோ பைடன் அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்று உறுதிபட கூறுனார்.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, “ஜோ பைடனுக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது பணிகளை வீட்டில் இருந்தவாறே நிறைவேற்றுவார். லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும் அதிபர் நலமுடன் இருக்கிறார். அவர் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதனால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். தொடர்ந்து அதிபரின் உடல் நிலை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மெடிக்கல் ரிப்போர்ட்டில், ஜோ பைடனின் சுவாச விகிதம் சாதாரணமாக இருப்பதாகவும், உடலின் வெப்பநிலை 97.8 டிகிரி, பல்ஸ் ஆக்ஸிமிட்ரி 97% இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கல்கி’ ரூ.1,000 கோடி வசூல்: பிரபாஸ் பற்றி அமிதாப் சொன்ன அந்த விஷயம்!
6.52 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: தமிழக அரசு பெருமிதம்!