சிவபெருமான் எந்த சாதி? துணைவேந்தர் எழுப்பும் சர்ச்சை!

இந்தியா

சிவபெருமான் கண்டிப்பாக பட்டியல் சாதி அல்லது பழங்குடியினராக இருந்திருக்க வேண்டும் என்று டெல்லி ஜேஎன்யூ பல்கலைகழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ‘பாலின நீதி குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து பல அதிரடியான கருத்துகளை முன்வைத்தார்.

jnu vc santishree

எந்த கடவுளும் பிராமணர் இல்லை!

அவர் பேசுகையில், “மானுடவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக தயவு செய்து நமது கடவுள்களின் தோற்றத்தைப் பாருங்கள். எந்த கடவுளும் பிராமணர் இல்லை. எந்த இந்துக் கடவுளும் மானுடவியல் ரீதியாக உயர் சாதியில் இருந்து வரவில்லை என்பது புரியும்.

சிவபெருமான் பாம்புடன் மயானத்தில் அமர்ந்திருப்பதால், கண்டிப்பாக அவர் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். அவர் உடுத்துவதற்கு மிகக் குறைவான ஆடைகளையே கொடுத்துள்ளனர்.

பிராமணர்கள் மயானத்தில் உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். லட்சுமி, சரஸ்வதி மற்றும் ஜெகநாதர் உட்பட கடவுள்களில் யாரும் உயர் சாதி சமூகத்தில் இருந்து வரவில்லை. ஆனால் நாம் ஏன் இன்னும் சாதி பாகுபாட்டை தொடர்கிறோம்? இது மிகவும் மனிதாபிமானமற்றது.” என்றார்

பெண்கள் சூத்திரர்களா?

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து கூறுகையில், “புராதன நூலான ’மனுஸ்மிருதி’யில் அனைத்துப் பெண்களும் சூத்திரர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் திருமணத்தின் மூலம் கணவரின் சாதியை அடையலாம் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

இது அசாதாரணமான பிற்போக்குத்தனம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் நீங்கள் ஒரு பெண்ணாகவும், இடஒதுக்கீடு பிரிவுகளில் இருந்து உங்களுக்கான படிப்பையோ, பதவியையோ பெற்றவராக இருந்தால், நீங்கள் இருமடங்காக ஓரங்கட்டப்படுவீர்கள் என்பதே கள உண்மை” என்றார்.

jnu vc santishree

ஜாதி வெறியில் கொல்லப்பட்ட சிறுவன்!

தொடர்ந்து பேசிய அவர் ”சாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல, ஆனால் இன்று பிறப்பின் அடிப்படையில் தான் சாதி தீர்மானிக்கப்படுகிறது என்று கூறி பலர் அதை பாதுகாத்து வருகின்றனர்.

ஒரு பிராமணரோ அல்லது வேறு எந்த சாதியினரோ செருப்புத் தொழிலாளியாக இருந்தால், அவர் உடனடியாக தலித் ஆகிவிடுவாரா? சமீபத்தில் கூட குஜராத்தில் தண்ணீர் தொட்டியைத் தொட்டதற்காக 9 வயது சிறுவன் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்டான். சக மனிதர்களை இப்படியா நடத்துவது?

இந்தியச் சமூகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், சாதியை அழிப்பது மிகவும் முக்கியமானது. ஏற்றத்தாழ்வு மிகுந்த இந்த சாதி அடையாளத்தில் நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட இந்த அடையாளத்தை பாதுகாக்க, பிறரை கொல்லவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பது வேதனைக்குரிய ஒன்று” என்றார்.

jnu vc santishree

வேறுபாடுகளை ஏற்கும் பெளத்தம்!

பின்னர் அம்பேத்கர் வலியுறுத்திய பெளத்தம் குறித்து சாந்திஸ்ரீ பேசினார். அவர், ”பௌத்தம் கருத்து வேறுபாடுகளை ஏற்றுகொள்கிறது. இந்தியாவின் கருத்து வேறுபாடுகள் மற்று கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறது என்பதை நிரூபிப்பதால், பௌத்தத்தை மிகப் பெரிய மதங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

சாதி வேறுபாடுகள் நிறைந்த இந்து மதத்தின் முதல் எதிர்ப்பாளர் கௌதம புத்தர் ஆவார். வரலாற்றில் முதல் பகுத்தறிவாளரும் அவரே என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரால் புத்துயிர் பெற்ற பெளத்த பாரம்பரியத்தில் சாதிய வேறுபாடுகள் இல்லை.” என்றார்.

நாட்டில் தற்போது மதம், சாதியின் அடிப்படையில் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் சாதிய பாகுபாடுகள் குறித்து துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் முன்வைத்த கருத்துகள் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

jnu vc santishree

யார் இந்த சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்?

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமனம் செய்யப்பட்டார்.

முன்னதாக சாவித்ரி பூலே புனே பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

தெலுங்கு, தமிழ், மராத்தி, ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். சர்வதேச உறவுகள், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை, மோதல், வன்முறை மற்றும் பாலினம் ஆகியவற்றில் பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

jnu vc santishree

இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளால் சர்ச்சை!

இதற்கிடையே சாந்திஸ்ரீ பண்டிட் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவர் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்படும்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது இவர் வெளியிட்ட ட்வீட் பதிவில் மத சிறுபான்மையினரை ‘ஜிஹாதிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் செயின்ட் ஸ்டீபன்ஸ் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திய விவசாயிகளை விமர்சித்துள்ளார். மேலும் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறு இவர் பதிவிட்ட கருத்துகள் துணைவேந்தராக நியமிக்கப்படும் போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவற்றை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியும் உள்ளார்.

முதலில் ஹிந்துத்துவாவிற்கு ஆதரவாக இருந்த சாந்திஸ்ரீ பண்டிட், தற்போது அதற்கு முரணாக சாதிய பாகுபாடுகள், அம்பேத்கரின் பெளத்தம் குறித்து பேசிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்துக் குடும்பம்: சாதிய ஆணாதிக்கத்தின் மைய அச்சு!

+1
0
+1
0
+1
1
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *