ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் நேற்று (அக்டோபர் 3) உதய்வாலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்த நிலையில், அவரது கொலைக்கு பிஏஎப்எப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று (அக்டோபர் 4) சென்றுள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் மர்மமான முறையில் அவரது வீட்டில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடலில் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹேமந்த் குமார் லோஹியா 1992-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை அதிகாரியாக இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் டிஜிபி டில்பக் சிங் லோஹியா மரணம் குறித்து கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் கொலையாளி, டிஜிபி லோஹியாவை மூச்சுத்திணற வைத்து கொன்றுள்ளான்.
உடைந்த கெட்சப் பாட்டிலை பயன்படுத்தி கழுத்தை அறுத்துள்ளான். பின்னர் லோஹியா உடலை எரிக்க முயற்சி செய்துள்ளான். கொலை நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை போலீசார் மீட்டுள்ளனர்.

அந்த சிசிடிவி பதிவில் கொலை நடந்த இடத்திலிருந்து டிஜிபி லோஹி வீட்டில் வேலை செய்து வந்த அவரது உதவியாளர் யாசீர் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
யாசீர், லோஹியா வீட்டில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் யாசீர் ஆக்ரோஷமாகவும், மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத செயல் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் முழுமையாக விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் மனநிலையை பிரதிபலிக்கும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மொபைல் சேவைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் டிஜிபி ஹேமந்த் குமார் கொலைக்கு லஷ்கர் இ தொய்பா கூட்டமைப்பான, பிஎப்எப்ஏ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கொலை குறித்து பிஎப்எப்ஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதைவாலா பகுதியில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை எங்களது சிறப்பு படை மேற்கொண்டு,
போலீஸ் டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவை தீர்த்துக்கட்டியது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் இத்தகைய பாதுகாப்பு சூழல் நிகழும் தருணத்தில் வருகை புரிந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எங்களால் முடிந்த சிறிய பரிசை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ள நிலையில், சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் உயிரிழந்தது ஜம்மு காஷ்மீரில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
செல்வம்
கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
பிரதமர் நிகழ்ச்சி: பத்திரிகையாளர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் கேட்பு!