Jharkhand train accident rumour

ஜார்க்கண்ட் ரயில் விபத்து : வதந்’தீ’யால் 12 பேர் பலி!

இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று (பிப்ரவரி 28) இரவு நடந்த கோர ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் அங்கா விரைவு ரயில் நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கல்ஜாரியா பகுதி அருகே வந்த போது ரயிலில் தீ பரவியதாக பயணிகளிடையே வதந்தி பரவியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அதிலிருந்து அவசரமாக இறங்கினர்.

தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அருகே இருந்த தண்டவாளத்தின் குறுக்கே ஓட முயன்றபோது, அந்த வழியாக சுமார் 140 கிமீ வேகத்தில் வந்த மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியது.

இதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஜம்தாரா துணைப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ள கிழக்கு ரயில்வே, நடந்தேறியுள்ள கோர விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர், முதல்வர் இரங்கல்!

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நடந்த விபத்து வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தனது இரங்கல் செய்தியில்,

“ஜம்தாராவில் உள்ள கல்ஜாரியா ரயில் நிலையம் அருகே நடந்த ரயில் விபத்து குறித்த சோகமான செய்தியால் எனது இதயம் துக்கமடைந்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா  சாந்தியடையட்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமை அளிக்கட்டும்.

இந்த கடினமான துக்க நேரத்தை தாங்கிக்கொள்ளுங்கள். நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

உலகின் முதல் வைட்டமின் டி இன்ஜெக்‌ஷன் இந்தியாவில் அறிமுகம்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *