நமக்கெல்லாம் ஒரு நாள் உணவு சுவை இல்லாமல் இருந்தாலே அதை சாப்பிட விரும்புவதில்லை. அல்லது காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் சுவை தெரியாத போது, ’எப்படா இந்த உடம்பு சரியாகும், எப்படா ருசியா சாப்பிடலாம்’ என ஏங்குவோம்.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் இரண்டு வருடங்களாக சுவையிழப்பால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுள்ளார். காரணம் கொரோனா பாதிப்பு.
கொரோனா வைரஸ் 2019ல் பரவ தொடங்கி உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் இந்த வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பில் மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்பு, கருப்பு பூஞ்சை, உடல் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்றுதான் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஹென்டர்சன் என்ற 58 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவையிழப்பு, வாசனையிழப்பு, கை கால் வலி, காய்ச்சல், உடல்சோர்வு என அறிகுறிகள் தென்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதில் மற்ற அறிகுறிகள் எல்லாம் சரியாகிவிட சுவையிழப்பு, வாசனை இழப்பு மட்டும் வருடக்கணக்கில் நீடித்தன. அவரது வீட்டு முற்றத்தில் பூக்கக்கூடிய பூக்களின் வாசனை கூட அவருக்கு பிடிக்காமல் போனது. பெரும்பாலான உணவு வகைகளும் அவருக்கு வெறுக்கும் வகையிலும் இருந்தன.
அதாவது, உணவின் மணத்தை அவரால் மணக்க முடியவில்லை. உணவுகளை சாப்பிடும் போது குப்பைகளை சாப்பிடுவது போல் உணர்ந்ததாக ஜெனிஃபர் ஹென்டர்சன் சிகிச்சை பெற்ற கிளீவ்லேண்ட் கிளினிக் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
உதாரணமாக பூண்டு மற்றும் வாழைப்பழங்களை சாப்பிட்ட போது பெட்ரோல் வாடை போல் இருந்ததாகவும், பீனட் பட்டரை சுவைக்கும்போது அது கெமிக்கல் வாடை போல் இருந்ததாகவும், சிக்கனை சாப்பிட்டால் அழுகிய இறைச்சியை சாப்பிட்டது போல் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அக்குப்பஞ்சர், வாசனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட போதிலும் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வாசனை இழப்பு, சுவை இழப்பால் எதையும் சாப்பிடமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு முன்னதாக புதிய வகை உணவுகளை சமைத்து சாப்பிடுவதையும், ரெஸ்டாரண்டுகளுக்கு கணவர் ஸ்டீவுடன் சென்று வித்தியாசமான உணவை ருசிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்த ஜெனிபருக்கு இந்த பாதிப்பு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இப்படி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அவர், சமூக ஊடகங்கள் மூலம் ஒரு குழுவில் சேர்ந்தார். அப்போது குழுவில் இருந்த மற்றவர்கள் மூலம் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையை மேம்படுத்த ஸ்டெலேட் கேங்க்லியன் பிளாக் (SGB) எனப்படும் வலி மேலாண்மைக்கான பொதுவான சிகிச்சையைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார்..
ஸ்டெல்லேட் கேங்க்லியன் பிளாக் என்பது ஒரு நபரின் கழுத்தின் முன் பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளில் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதாகும். இது ஒருவகையான வலி ஊசி ஆகும்.
இந்த சிகிச்சையை கிளீவ்லேண்ட் கிளினிக்கில் பயணியாற்றும் மருத்துவர்களிடம் பெற்று வந்துள்ளார். 2022 டிசம்பரில் அவருக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஸ்டெல்லெட் கேங்க்லியன் பிளாக் சிகிச்சையை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெற்ற நிலையில் அவர் வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
இந்த சிகிச்சையை தொடர்ந்து செவிலியர் ஒருவர் ஜெனிபருக்கு குடிக்க காபி கொடுத்துள்ளார். அதை முகர்ந்து பார்த்து காப்பியை குடித்துள்ளார். அப்போது காபியின் மணமும், சுவையையும் உணர்ந்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுவையை உணர்ந்த அந்த கணத்தில் ஜெனிபர் குழந்தை போல் அழுதுள்ளார். என் வாழ்க்கையில் சிறந்த வாசனை இதுதான் என்றும் கூறியுள்ளார்.
“என்னால் வாசனையை உணர முடிகிறது” என அவர் சிறுகுழந்தை போல் அழும் வீடியோ கடந்த சில நாட்களாக ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக சுவை, வாசனை இழப்பால் அவர் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.
பிரியா
சென்னை – கோவை வந்தே பாரத்: டிக்கெட் விலை எவ்வளவு?
வெளியானது விமலின் ‘தெய்வ மச்சான்’ ட்ரெய்லர்!