ஜேஇஇ நுழைவுத் தேர்வு: விண்ணப்பக் கட்டணம் உயர்வு!
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களாக ஐஐடி, என்ஐடி போன்ற தலைசிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெற முடியும்.
இந்த தேர்வை எழுத, 2021, 2022ல் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2023ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 2023ம்ஆண்டு ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வு நடைபெற இருக்கிறது.
இதன் விண்ணப்பத்தில், 10ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களை பதிவிடுமாறு கோரப்பட்டிருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, மதிப்பெண்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இந்த மாணவர்களால் தற்போது ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவி வந்தது. எனவே, தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பப் படிவத்தை மாற்றி அமைக்கும்படி தமிழகத்திலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்/சதவிகிதங்களை பூர்த்தி செய்யத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜேஇஇ தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு 2023இல் தாள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் ஆண் (பொது) விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள் ரூ.800 செலுத்த வேண்டும். SC/ST/PwD மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.
இந்தியாவிற்கு வெளியே தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் (பொதுப் பிரிவினர்) 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு வரை (2022) ஆண்களுக்கு, ரூ.650 வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ.1000 ஆகவும், பெண்களுக்கு ரூ.325 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு!
ஜனவரி 9 சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு