ஜப்பான் நாட்டின் நிசான் நிறுவனம் 1933 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. தலைமையகம் யோகஹாமாக நகரில் உள்ளது. ஹோண்டா நிறுவனம் 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமையம் ஹமாமாட்சு நகரில் அமைந்துள்ளது.
உலகளவில் அதிக கார்கள் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களில் ஹோண்டா 8வது இடத்திலும் நிசான் 9வது இடத்திலும் உள்ளன. ஜப்பானின் பாரம்பரியமான இந்த நிறுவனங்கள் இனிமேல் ஒன்று சேர்ந்து ஒரே நிறுவனமாக செயல்பட போவதாக அறிவித்துள்ளன.
இந்த நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை நிறுவவுள்ளன. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையில் வணிக ஒருங்கிணைப்பு பரிசீலனைகளைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.
நிசான் மற்றும் ஹோண்டாவின் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 2026 க்குள் டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், இந்த நிறுவனங்களும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. அதே போல, ஆய்வு மையங்களும் அடுத்த தலைமுறைக்கான கார்களை பற்றி ஆராயவும் ஒருங்கிணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.
நிஸ்ஸான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் மகோடோ உச்சிடா இது குறித்து கூறுகையில், ‘இரு நிறுவனங்களின் பலத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், எங்களின் பிராண்டுகளை இன்னும் சிறப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். இரு நிறுவனங்களாலும் தனித்து இயங்கி கண்டுபிடிக்க முடியாத கார் ரகங்களை உருவாக்க வழிவகை பிறந்துள்ளது’ என்கிறார்.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால், உலகளவில் அதிக கார்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளன.
ஜப்பானின் மற்றொரு முக்கிய கார் நிறுவனமான மிட்சுபிஷியும் ஹோண்டா மற்றும் நிசானுடன் கரம் கோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த 3 நிறுவனங்களும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியார் நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு!