ஜப்பான் பெண்ணுக்கு டார்ச்சரா? மகளிர் ஆணையம் உத்தரவு!

இந்தியா

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இளைஞர்களால் சீண்டலுக்கு உள்ளாகி துன்புறுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உடனே வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் இன்று (மார்ச் 10) உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்துடன் ஹோலி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கொண்டாடப்பட்ட இடங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்வது வழக்கம். ஆனால் சில இடங்களில் இது பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு வழிவகுக்கும் நிகழ்வாக மாறிவிடுகிறது.

8ம் தேதி டெல்லியில் கொண்டாடப்பட்ட ஹோலி விழாவில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் கும்பலால் பிடித்து இழுக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஹோலி ஹை என்று கூறியவாறு அந்த ஜப்பானிய இளம் பெண் மீது இளைஞர்கள் வண்ணப்பொடிகளை பூசுகின்றனர். ஒரு சிறுவன் அவரது தலையில் முட்டை உடைக்கின்றான். தொடர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது பிடித்த ஒருவரை கன்னத்தில் அறைந்தபடி அந்த பெண் அங்கிருந்து விலகுகிறார்.

கடைசியில் வண்ணப்பொடியில் முழுவதுமாக நனைந்த அந்த ஜப்பானிய இளம்பெண் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அதேவேளையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணையை கோரியுள்ளதாகவும், விரிவான அறிக்கையை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வீடியோவில் காணப்படும் இடம் பஹர்கஞ்ச் என்று தெரியவந்துள்ளதை அடுத்து அந்த பகுதியில் டெல்லி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் வீடியோவில் காணப்படும் இளைஞர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் எந்த ஒரு வெளிநாட்டவரிடமும் இருந்தும் தவறான நடத்தை தொடர்பான புகார் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

மாத்திரையால் உயிரிழந்த பள்ளி மாணவி: நடந்தது என்ன?

மனிதம் போற்றும் ‘அயோத்தி’: சீமான் பாராட்டு!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *