அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலை காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் Nasdaq, Dow Jones கடுமையாக சரிந்து உலக பங்குச் சந்தைகளின் வளர்ச்சியை நிர்மூலமாக்கியுள்ளது. மேலும், ஆசிய பங்குச் சந்தை உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
ஜப்பானின் நிக்கேய் குறியீடு கடந்த 1987 ஆண்டுக்குப் பிறகு நேற்று திங்கள்கிழமை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து ஜப்பான் பங்கு சந்தையில் கருப்பு தினமாக மாறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா பங்குச் சந்தையும் இந்த பொருளாதார தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நாடுகளின் சந்தை குறியீடுகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் உள்நாட்டு போர், இங்கிலாந்தில் சரிவை கண்டு வரும் உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணிகளால், கடந்த வெள்ளிக்கிழமை கடும் சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடுமையான சரிவை சந்தித்தன.
திங்கள்கிழமை வர்த்த முடிவில் சென்செக்ஸ் 2222.55 புள்ளிகள் சரிந்து 78,759.40 புள்ளியிலும், நிஃப்டி 662.10 புள்ளிகள் சரிந்து 24,055.60 புள்ளியிலும் முடிவடைந்தது. கடந்த ஜூன் மாதம் 4 தேதி பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நிஃப்டி 5 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி மீண்டுமொரு மோசமான நாள் வீழ்ச்சியைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தை BSEல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 15 லட்சம் கோடிக்கு மேல் சரிவை கண்டு இந்திய பங்குச்சந்தையில் உள்ள முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. BSE இல் வரத்தகமாகி வரும் சுமார் 600 நிறுவனங்கள் 52 வார விலை வீழ்ச்சியை சந்தித்தன. மேலும், நிஃப்டி50 இல் பட்டியலிடப்பட்ட 50 நிறுவன பங்குகளில் 45 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் அனைத்து துறை குறியீடுகளும் கடும் சரிவுடன் முடிவடைந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் மீடியா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மெட்டல் நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி மெட்டல் குறியீடு 5.5% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பங்குச் சந்தை சார்ந்த இந்திய நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஃபார்மா துறை நிறுவனங்கள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை சந்தித்தன. அதன்படி இந்தியாவில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட், டிசிஎஸ் லிமிடெட், விப்ரோ லிமிடெட் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் திங்களன்று 5% வரை நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
“திடீர் சரிவை சந்தித்து வரும் இந்த பொருளாதார மந்தநிலை நீடிக்கும் பட்சத்தில் இது உலக நாடுகளுக்கிடையே பொருளாதார தாக்குதலாக மாற்றம் கண்டு மீண்டுமொரு உலகப்போருக்கு வழி வகுக்கும் எனவும். வெனிசுலாவின் பொருளாதாரத்தை அமெரிக்கா திட்டமிட்டு அழித்து அதன் மக்களை வறுமையில் ஆழ்த்தியது. உலகளாவிய பொருளாதாரப் போருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று South China Morning Post எனும் பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அனைத்து துறைகளிலும் உற்பத்தி வளர்ச்சியில் அபிரிதமாக இருந்தாலும், வட்டி விகித குறைப்பு, வேலை வாய்ப்பின்மை சதவீத உயர்வு போன்ற காரணிகளை பயன்படுத்தி பெட்ரோலிய மூலப்பொருள் மற்றும் தங்கம் விலை கட்டுப்பாடுகளை அறிவித்து அதன் விலையை உயர்த்தி உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயலை அமெரிக்கா செய்துள்ளதாக அந்த கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் Britannia (1.23%), Hindustan Unilever (0.94%), Nestle India (0.75%), Tata Consumer Products (0.36%), HDFC Life (0.35%) நிறுவன பங்குகள் லாபத்தையும் Tata Motors (-7.15%), Adani Ports (-5.92%), ONGC (-5.86%), Hindalco (-5.11%), Tata Steel (-5.03%) கடும் சரிவையும் சந்தித்தன.
திங்களன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 31 பைசா சரிந்து 84.03 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ரூபாய் விலை சரிந்துள்ளதால் இந்தியாவில் தங்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 4,160 கோடியாக உள்ளதாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்தை ஒப்பிடுகையில் இது இருமடங்கு லாபம் என்று தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 101.90% (YoY) உயர்ந்து ரூ.511.2 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் முதல் காலாண்டில் நிகர லாபம் 32% ஆண்டுக்கு ஆண்டு (YoY) 136.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கப்பல் கட்டுமான நிறுவனமான Mazagon Dock Shipbuilders இன் பங்கு திங்களன்று 6.5% சரிவை சந்தித்தது. மேலும் கப்பல் கட்டுமான நிறுவனங்கள் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் பங்குகள் ஆகியவை தலா 5% சரிவுடன் முடிந்தது.
GAIL (India) Ltd நிறுவனம் மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி வயலில் நிலக்கரி மற்றும் செயற்கை இயற்கை எரிவாயு திட்டத்தை அமைப்பதற்கு கோல் இந்தியாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக திங்கள்கிழமை SEBI இடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) ஜூன் வரையிலான முதல் காலாண்டின் நிகர லாபம் 15 சதவீதம் சரிந்து ரூ.8,938.10 கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.10,526.78 கோடியை ஒப்பிடுகையில் இது 15% சரிவு என்று அறிவித்தது. இந்நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் ONGC பங்கு 6.01% சரிந்தது.
சஃபோலா மற்றும் பாராசூட் எண்ணெய் பிராண்டுகளை நிர்வாகிக்கும் மரிகோ நிறுவனம் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ. 464 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 1.47% உயர்ந்து 672.15 ரூபாயில் முடிவடைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் ஜப்பான் வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் நிஃப்டி 134 புள்ளிகளும், சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் Tata Motors (2.98%), Tech Mahindra (2.60%), L&T (2.40%), Infosys (2.29%), HCL Tech (2.20%) நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் SBI Life (-0.79%), Apollo Hospitals (-0.40%), HDFC Life (-0.39%) பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது.
வங்கதேச அரசியல் பதட்டம், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சி ஒருபுறமிருக்க !ஜப்பான் பங்குச் சந்தை சரிவு சாரந்த விவகாரம் பற்றி விவாதிக்க ஜப்பான் ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் தலைமையில் இன்று காலை 11.30மணியளவில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ள நிலையில்; இது சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Gujarat Gas, Tata Power, Cummins India, Gland Pharma, PI Industries, JM Financia, TVS Motor, Lupin, IIFL Finance Bharti Airtel, Marico, ONGC நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளதால் இந்நிறுனங்களின் பங்குகள் சந்தை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
-மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹேப்பி நியூஸ் மக்களே: தங்கம் விலை குறைஞ்சிடுச்சு… எவ்வளவு தெரியுமா?
வங்கதேச கலவரம்: நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்!