ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், காஷ்மீர் பண்டிட்களுக்கு நியமன உறுப்பினர் அந்தஸ்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு , காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் அப்போது ஏற்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக நியமிக்கப்பட்ட மறுவரையறை குழு பரிந்துரையின்படி, ஜம்மு – காஷ்மீர், 114 தொகுதிகளை உடையதாக இருக்கும். இதில், 24 தொகுதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதையடுத்து, சட்டசபையின் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
இதில், 43 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும், 47 தொகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும் உள்ளன. சட்டசபையில் இரண்டு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இதற்கிடையே, 1990களில் காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன.
இதையடுத்து, லட்சக்கணக்கான பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி, நாட்டின் மற்ற பகுதிகளில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க, காஷ்மீர் பண்டிட்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனடிப்படையில் பண்டிட்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க, தொகுதி மறுவரையறை குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி, இரண்டு பண்டிட் நியமன உறுப்பினர் பதவிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மசோதா, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
சில்க் ஸ்மிதா பிறந்தநாள்: வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்!
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது: எடப்பாடி