ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் 40 தொகுதிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 1) விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 61.38% வாக்குகள் பதிவாகின.
செப்டம்பர் 26-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் 57.31% வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். முக்கியமாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர்களான தாரா சந்தும், முசபர் பேயிக்கும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வால்மிக்கி சமாஜ் மற்றும் கோர்க்கா சமூகம் அகதிகள் இன்று வாக்களிக்க உள்ளார்கள்.
அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்த பின்பு தான் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமம் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் 2018 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தான் இவர்கள் வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடக்கும் தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் 5,060 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி வரை 28.12 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “ இந்த தேர்தல் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயமரியாதை மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றியது.
அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘இந்தியா’ கூட்டணி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வலுவான எதிர்காலத்திற்கானது. மேலும் உங்கள் உரிமைகளுக்கான போராடும் வலிமையைத் தரும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா “ அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் தேர்தலில் பங்கெடுத்தால் தான் ஊழலற்ற, வாரிசு அரசியலற்ற ஜம்மு காஷ்மீரை உருவாக்க முடியும்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்… வழக்கை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!
விஜயின் ‘தி கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
3000 ரன்கள் 300 விக்கெட்டுகள் : ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர்பா!