சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஜம்மு காஷ்மீர் கீழமை நீதிமன்றம் இன்று (செப்டமபர் 23) உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சு இந்து மதத்தினரை புண்படுத்துவதாக கூறி நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் உதயநிதி பேச்சு தொடர்பாக அவர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தன்னை புண்படுத்தும் வகையில் இருப்பதாக ஜம்முவை சேர்ந்த அதுல் ரெய்னா என்பவர் கீழமை நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதனை இன்று விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதி மணீஷ் கே மன்ஹாஸ், ”குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 202-ன் கீழ் புகாரின் தன்மை குறித்து விசாரிக்க மூத்த காவல் கண்காணிப்பாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உதயநிதி பேசியது விசாரணையில் உறுதியானால், உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இதுதொடர்பாக அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் ஜம்மு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: காத்திருந்த அதிமுக… மும்பை பறந்த அமித்ஷா… டெல்லியில் நடந்தது என்ன?