ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிராரி பல்லா சாவ்ஜியன் அருகே மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று (செப்டம்பர் 14 ) பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 24 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஐந்து பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்மு நகருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவம், உள்ளூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் ‘ பூஞ்ச் பகுதியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இருக்கிறது, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘பூஞ்ச் சாவ்ஜியான் பகுதியில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது.
எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ: பயணிகளின் நிலை என்ன?