இலங்கையில் இன்று (ஜனவரி 6) முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக புகழ் பெற்றவை.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அங்கு முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை திருகோணமலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலின்படி இன்று போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை செந்தில் தொண்டைமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகளில் நின்று கொண்டு மக்கள் போட்டியை பார்வையிடுகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தயாரிப்பாளர் சங்கத்தை தற்காலிகமாக காப்பாற்றிய கலைஞர் 100 விழா!