கனடா உடனான மோதலுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை இன்று (செப்டம்பர் 28) மீண்டும் சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இருநாடுகளிடையே விரிசலை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக உயரதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது நெருக்கடி நிலையை உருவாக்கியது.
மேலும் இந்தியா கனடாவில் விசா சேவைகளை நிறுத்திவிட்டு, கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், கனடாவும் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டது.
இதனால் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே மோதல் உண்டாகி வந்த நிலையில்,
நியூயார்க்கில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) கூட்டத் தொடரில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “அது இருதரப்பு சந்திப்பு அல்ல. பல நாடுகளின் சந்திப்பு. அப்போது இந்தியா-கனடா பதற்றம் குறித்து பேசப்படவில்லை.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். நாங்கள் எங்கள் கனேடிய மற்றும் இந்திய சகாக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். கனேடிய விசாரணைக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என்று மில்லர் கூறினார்.
மேலும் ஐ.நா பொதுச் சபையில் ஜெய்சங்கர் ஆற்றிய உரையில், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கான பதில்களைத் தீர்மானிக்க அரசியல் வசதிக்காக ஐ.நா உறுப்பு நாடுகளை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது கனடா மீதான மறைமுக தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடந்து அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவுக்கும், இந்தியாவுக்கும் தூதரக நெருக்கடி நிலவி வரும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை இன்று மீண்டும் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது கனடா – இந்தியா மோதல் குறித்து தீவிரமாக பேசப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
“மகாராணி பிறந்திருக்கிறாள்”: கொண்டாட்டத்தில் “குக்கு வித் கோமாளி” புகழ்!