ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் சிபிஐ கடும் வாதத்தை முன்வைத்துள்ளது.
ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 13 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.
அதன்பின்னர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது மனைவி பாரதி மற்றும் லண்டனில் இருக்கும் இரு மகள்களோடு வெளி நாடுகளுக்கு மே 17 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்கு அனுமதி பெறுவதற்காக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யும் படி நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.
அதன்படி, சிபிஐ நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதி ஜெகன் மீதான முதன்மை விசாரணை நடைபெற உள்ளது. எனவே அவருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டாம்’’ என சிபிஐ தெரிவித்தது.
இதற்கு ஜெகன் சார்பில் ஆஜரான வக்கீல், நீதிமன்ற உத்தரவை மீறாமல் ஆந்திர முதல்வர் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வாதிட்டார். மேலும் அரசியல் சாசனத்தில் வெளிநாடு செல்வதற்கான உரிமையையும் சுட்டிக்காட்டி அவர் அனுமதி கோரினார்.
இதையடுத்து இந்த விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது!
பஞ்சாயத்துக்கு வராத கமல்… லிங்குசாமி ஏமாற்றம்!