ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு அரசு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்துசெய்யப்பட்டுவிட்டதால், கடந்த மாதம் ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ஆனால் வழக்கில் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், ரத்துசெய்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாகவும், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ஜாபர் சேட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 6ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்து கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ”ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. குறிப்பாக சி.ஆர்.பி.சி சட்டத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்த பின்னர், மீண்டும் அதனை திரும்பப்பெற நீதிமன்றங்களுக்கு அனுமதி கிடையாது. ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசாரிக்க முடியாது” என்றனர்.
தொடர்ந்து ”ரத்துசெய்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அடிப்படை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை ரத்துசெய்த உத்தரவில் நீதிபதி கையெழுத்திடாததால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஜாபர் சேட் வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து உரிய தீர்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்… வழக்கை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!
விஜயின் ‘தி கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!