It is crime if MLA/MP bribed to speak and vote
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (மார்ச் 4) உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் உறவினர் சீதா சோரன். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஜமா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகவும் உள்ளார்.
நிராகரித்த உயர்நீதிமன்றம்!
கடந்த 2012 ராஜ்யசபா தேர்தலில் சட்டப்பேரவையில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக சீதா சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புகாரின் பேரில் அவர் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.
அப்போது, அரசியலமைப்புச் சட்டம் 194 (2)-ன் படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை ரத்து செய்யக் கோரி சீதா சோரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா, சஞ்சய் குமார் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.
அப்போது, சீதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், வழக்கறிஞர் விவேக் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அவர்கள், 1998ஆண்டு நரசிம்மராவ் vs ஸ்டேட் வழக்கில், ’லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அரசியலமைப்புச் சட்டம் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய இரண்டின் கீழ் விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பினை சுட்டிக்காட்டினர்.
மேலும் 105(2) சட்டப்பிரிவு எம்.பி.க்களை லஞ்சக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்கிறது என்றும், எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கு விலக்கு அளித்தால் தான் அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் தங்கள் கருத்துகளைப் பேசுவார்கள்” என்றும் வாதிட்டனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
இந்த நிலையில் லஞ்ச வழக்குகளில் இருந்து நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்களுக்கு விலக்கு இல்லை என்றும், லஞ்சம் வாங்கும் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஒருமித்தமாக தீர்ப்பளித்தது.
மேலும் எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்காக அல்லது வாக்கெடுப்புக்காக லஞ்சம் வாங்கும் வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கும் 1998 ஆம் ஆண்டு நரசிம்மராவ் தீர்ப்பினை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.
அதன்படி இனி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவைகளில் கேள்வி கேட்பதற்கும், தீர்மானங்கள் மற்றும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும் சக உறுப்பினர்கள் அல்லது கட்சிகளிடமிருந்து லஞ்சம் பெற்றால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும். அவர்கள் இனி விலக்கு கோர முடியாது.
லஞ்சம் – ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கிறது!
மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டிய ஐந்து மேற்கோள்கள் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
1. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது.
2. ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவை அரசியலமைப்பின் விருப்புகளையும் விவாத கொள்கைகளையும் அழிக்கின்றன.
3. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கும் பி.வி. நரசிம்மராவ் தீர்ப்பின் படி, பெரும்பான்மையின் குரல் பெரும் ஆபத்தில் உள்ளதால், ரத்து செய்யப்பட்டது.”
4. சட்டமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளியாகிறார்.
5. லஞ்சம் பெறுவதால் ஒரு உறுப்பினர் நேர்மைக்கு மாறான வழியில் வாக்களிக்க தூண்டப்படுகிறார். அது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கிறது” என்று சந்திரசூட் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ED முன்பு 12ஆம் தேதிக்கு பிறகு ஆஜராக தயார்.. ஆனால்’ : கெஜ்ரிவால்
சனாதன பேச்சு… உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
It is crime if MLA/MP bribed to speak and vote