டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் வரி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடமிருந்து லேப்டாப், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பிபிசி நிறுவனம், ‘இந்தியா: மோடிக்கான கேள்வி’ என்ற ஓர் ஆவணப்படத்தை இரண்டு பகுதியாக வெளியிட்டது. பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தச்சூழலில் பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக நுழைந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு மற்றும் சர்வதேச வரி மற்றும் டிடிஎஸ் பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகள் குறித்த புகாரைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஷிப்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றி அலுவலகத்தை பூட்டி அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்காரணமாக பிபிசி பத்திரிகையாளர்கள் யாரையும் தொடர்புகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களின் லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது ஷிப்ட்டில் வருபவர்களை யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று பிபிசி மெயில் அனுப்பியுள்ளது.
அதேசமயம் இது வரி தொடர்பான ஆய்வு. இது சோதனை அல்ல என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
“எங்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. அதற்காக எங்கள் குழு பிபிசி அலுவலகத்திற்குச் சென்று ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எங்கள் அதிகாரிகள் கணக்கு ஆவணங்களை சரிபார்க்கச் சென்றுள்ளனர்” என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது எங்களின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். இந்த நிலைமை விரையில் சரி செய்யப்படும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, அரசு நிறுவனம் தனது வேலையை செய்து வருகிறது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒளிபரப்பு நிறுவனத்துக்கு தடை விதித்ததை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இந்தியாவுக்கு எதிராக தீங்கிழைத்த கறைபடிந்த வரலாற்றை கொண்டது பிபிசி. மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம்” என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
பிரியா
கொசுத்தொல்லை அதிகமா இருக்கா? – இந்த எண்ணுக்கு புகார் கொடுங்க!
காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி!