நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவின் தென் துருவ ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.
தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் நிலவில் 12 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. ஆய்வுப் பணிகள் குறித்த தகவல்கள் மற்றும் நிலவின் புகைப்படங்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொண்டிருந்தது ரோவர்.
இந்த ஆய்வின் மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.
இதற்கிடையே, நிலவின் தென்துருவ பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர், லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
லேண்டர், ரோவர் கலன்கள் சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியைக் கொண்டே இயங்குகின்றன.
இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன.
நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவரை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
அதன்படி தென்துருவ பகுதியில் தற்போது சூரிய உதயம் தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து ஸ்லீப்பிங் மோடில் உள்ள லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்று மீண்டும் லேண்டரும் ரோவரும் எழுந்து ஆய்வுப் பணிகளைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கு மேலாககுளிர்நிலை இருக்கும். அதனால் லேண்டர், ரோவரில் உள்ள சாதனங்கள், இயந்திரங்கள் குளிர்ந்த சீதோஷ்ண சூழலில் சேதமடையாமல் மீண்டும் இயங்க வேண்டும். அதற்கான சில முன்தயாரிப்புகளை இஸ்ரோ ஏற்கனவே செய்துள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் இந்த முயற்சி பலன் அளிக்கும் என்று முழுமையாக கூற முடியாது.
மோனிஷா
33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: மோடியை பாராட்டிய பெண் எம்.பி-க்கள்!
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!