இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கு தொடர்பாக ஐந்து முன்னாள் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 2) ரத்து செய்தது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994 ஆம் ஆண்டு உளவு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டார்.
இந்தியாவின் விண்வெளி திட்டம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார். நாராயணனைத் தவிர, மேலும் ஐந்து பேர் உளவு பார்த்ததாகவும், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்கு மாற்றியதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இதில் மற்றொரு இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் இரண்டு மாலத்தீவு பெண்களும் அடங்குவர். இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் விஞ்ஞானி நம்பி நாராயணன் 2018 இல் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை முதலில் கேரள மாநில காவல்துறை விசாரித்து, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ், குஜராத் முன்னாள் ஏடிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் போலீஸ் அதிகாரிகள் எஸ்.விஜயன், தம்பி எஸ்.துர்கா தத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி பி.எஸ்.ஜெயபிரகாஷ் ஆகியோர் அடங்குவர்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தியது. இதற்கிடையே அந்த அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விஞ்ஞானி நம்பி நாராயணனை சதி செய்து பொய் வழக்கில் சிக்க வைத்த அதிகாரிகளின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கோரியது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவும், முன்னாள் அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகி வாதாடினர்.
இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதன் பின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பை இன்று (டிசம்பர் 2) வழங்கியது.
முன்னாள் அதிகாரிகளின் ஜாமீன் விண்ணப்பங்களை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிய உச்ச நீதிமன்றம் நான்கு வார காலத்திற்குள் அவற்றின் மீது மறு விசாரணை செய்து முடிவெடுக்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக, விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில், 5 வார காலத்திற்கு கைது செய்வதிலிருந்து விலக்கு அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியதில் உயர் நீதிமன்றம் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியிருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“உயர்நீதிமன்றம் சில தவறுகளை செய்துள்ளது. நீதிபதி ஜெயின் கமிட்டி அறிக்கையை கையாளவில்லை. தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கவில்லை. தனிப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தனித்தனியாக கையாள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உளவு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது உளவு குற்றம் சாட்டிய அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
–வேந்தன்
அவரை நான் வெறுக்கவும் செய்கிறேன், நேசிக்கவும் செய்கிறேன் – மனம் திறந்த பின்லேடன் மகன்
குவாரி, குட்காவில் லஞ்சம்-கூவத்தூரில் செலவு: விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் ஐடி