நிலவில் நிலநடுக்கம்: இஸ்ரோ கண்டுபிடிப்பு!
சந்திரயான்-3 விக்ரம் லேண்டரில் அமைந்துள்ள சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி நிலவில் நிகழ்ந்த அதிர்வைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரனுக்கு சந்திராயனை அனுப்பிய இஸ்ரோ அங்கு பூமியில் ஏற்படுவது போன்று பூகம்பம் ஏற்படுகிறதா… நில அதிர்வு உள்ளதா என்பதை கண்டறிய விக்ரம் லேண்டரில் நில அதிர்வு செயல்பாட்டிற்கான இல்சா (ILSA) கருவியை முதன்முறையாக பொருத்தியிருந்தது.
இந்த நவீன கருவி முழுமையாக பெங்களூரில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம் (LEOS) ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து இஸ்ரோ!
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், ”சந்திரயான்-3ல் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் தொகுப்பு இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. குறிப்பாக நிலவில் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு செய்வதற்காக உள்ள இல்சா ஆறு அதிக உணர்திறன் கொண்ட முடுக்கமானிகளின் தொகுப்பை உள்ளடக்கியது.
இவை அனைத்தும் சிலிக்கான் மைக்ரோமச்சினிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
தற்போது இந்த நவீன கருவி தான், ரோவர் மற்றும் பிற பேலோடுகளின் இயக்கங்கள் காரணமாக நிலவில் ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்து வருகிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இயற்கையாக நிலவில் நிகழ்ந்துள்ள நில அதிர்வையும் இல்சா பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், அதிலிருந்து வெளிவந்து நிலவில் உலாவி வரும் பிரக்யான் ரோவர் மூலம் அங்கு அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனிசு, சிலிகான், ஆக்சிஜன், சல்பர், கந்தகம் ஆகிய தனிமங்கள் இருப்பதை இஸ்ரோ ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நிலவில் நில அதிர்வையும் பதிவு செய்துள்ளதை தற்போதைய சந்திரயான் -3 திட்டத்தின் ஒரு திருப்புமுனை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிமுக பகிரங்க ஆதரவு!
மும்பை சிறுமி ஆசையாக வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய ஸ்டாலின்