isro announced adithya L1 launch date

சூரியனுக்காக செல்லும் ஆதித்யா எல்1: தேதி குறித்த இஸ்ரோ!

இந்தியா

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகியுள்ள ’ஆதித்யா எல்1’ விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான தேதியை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 28) அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சந்திரயான் 3 திட்டத்தின் படி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக முதன்முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ள ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ஆதித்யா எல்1 விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1  விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

இந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம், சூரியனின் வெளிப்புற அடுக்கான போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் கொரோனா ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு ஆதித்யா எல்1 தகவல்களை அனுப்பும்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாமினில் கூட வெளிவர முடியாது: ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *