ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் மோதல்!
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் ஆளில்லா வான்வெளி தாக்குல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ ஜெனரல் முகமது ரேசா ஜாஹிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஐநா சாசனத்தின் 51-வது பிரிவில் குறிப்பிட்டுள்ள தற்காப்புக்கான ஈரானின் உரிமைகளை பயன்படுத்தி தான் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேவேளையில், ஈரான் ஏவிய 99 சதவிகித ஏவுகணைகள் வானில் இடைமறிக்கபட்டதாகவும், ஐடிஎஃப் தளம் உள்ளிட்ட சிறிய கட்டிடங்கள் தகர்ப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
பதிலடி கொடுத்த இஸ்ரேல்
இதனால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “அடுத்த 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் ஈரான் மீது போர் நடவடிக்கை தொடரும் என்று ஜோ பைடன் நிர்வாகத்திடம் இஸ்ரேல் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்கிறார்கள்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக சிஎன்என் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், இஸ்பஹான் மாகாணத்தில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்களை தடுத்து நிறுத்தியதாக ஈரான் உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக, தெஹ்ரான், ஷிராஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த போர் நடவடிக்கை குறித்து இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
இஸ்பஹான் மீது தாக்குதல் ஏன்?
ஈரான் நாட்டின் இஸ்பஹான் மாகாணம் என்பது அணுசக்தி மையமாக செயல்படுகிறது. எனவே, இந்த பகுதியில் தாக்குல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டதாக தெரிகிறது.
முன்னதாக இதுகுறித்து ஐநா சபையின் அணுசக்தி கண்காணிப்பு மையத்தின் தலைவர் ரபேல் குரோஷி கூறும்போது, ”இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம். இதுகுறித்து ஐநா தனது கவலையை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
1 மணி நிலவரம் : திரிபுராவில் அதிக வாக்குப்பதிவு… தமிழ்நாட்டின் நிலை என்ன?
ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!