காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவு போராளிகள் அமைப்பான ஹமாஸ் திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர், நூற்றுக்கு மேற்பட்டவர்களை இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் சென்றனர்.
தீவிரமான போர் தாக்குதல்!
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனின் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினரை குறிவைத்து காசா மீது தீவிர போரை அறிவித்தார்.
அதன்படி கடந்த ஒருவாரமாக ஹமாஸ் மீதான பதிலடி தாக்குதல் என்ற பெயரில் காசாவில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் அவர்களது குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் அதிபயங்கர குண்டுகளை வீசி வருகிறது.
இதுவரை 6000 வெடிகுண்டுகள் மூலம் 4 ஆயிரம் டன் வெடிப்பொருட்களை வீசி காசாவை முற்றிலுமாக சிதைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
447 குழந்தைகள் பலி!
இதில் வேதனைக்குரிய செய்தியாக இந்த போர் தாக்குதலில் இதுவரை அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1300 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே வேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1,417 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் அடங்குவர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 6,268 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கெடு!
இந்த நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தண்ணீர், உணவு, மின்சாரம் கிடைப்பதை தடுத்து முழுமையான முற்றுகையை கையில் எடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
அதன் தொடர்ச்சியாக வடக்கு காசாவில் வாழ்ந்துவரும் 11 லட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு காசாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.
இந்த அறிவிப்பு நெருக்கடியான போர் தாக்குதலுக்கு நடுவே குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மக்களிடம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஐ.நா எச்சரிக்கை!
இந்தநிலையில், குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு மக்களை இடம்பெயர இஸ்ரேல் கூறுவது சாத்தியமற்றது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இதுவரை காஸாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக 84,444 பேர் அதிகரித்து 423,378 ஐ எட்டியுள்ளதாக ஐ.நா மனிதாபிமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு பரிசளித்த யோகி பாபு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!