இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (நவம்பர் 24) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் இஸ்ரேலை சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேலும் தன்னுடைய பதில் தாக்குதலை தொடங்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 48 நாட்களை கடந்தும் இந்த யுத்தம் நீடித்ததால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் நவீன ஆயுதங்களுடன் நடத்திய பயங்கர தாக்குதலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் உட்பட காசாவில் மட்டுமே இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த போரினால் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காசா பகுதியை சேர்ந்த மக்களும் பிற நாடுகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
போரை நிறுத்துமாறு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் முதல்முறையாக தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது. அதன்படி இன்று(நவம்பர் 24) தொடங்கி 4 நாட்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையில் போர் எதுவும் நடைபெறாது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கிறது.
பிணைக்கைதிகளை விடுவிக்க ஏதுவாக நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துகிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிப்பார்கள் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு முறை 10 பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அதே நேரம் இது தற்காலிக போர் நிறுத்தம் தான் என்றும் ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
The exchange of prisoners has begun#IsraelisGenocidalState #GazaConcentrationCamp #GazaGenocide #فلسطين_الان #ceasefire #Ireland #Israel #غزة_تنتصر #كتائب_االقسام
pic.twitter.com/dVGKxwQcaL— MemesByZayn 🔻 (@TweetsByZayn) November 24, 2023
இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பும் வரவேற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு 50 பிணைக்கைதிகளை விடுவித்தால் பதிலுக்கு இஸ்ரேல் 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!