இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் அமல்… 16 மாத போர்க்களத்தில் பரவும் அமைதி!

Published On:

| By christopher

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (ஜனவரி 19) பிற்பகல் அமலுக்கு வந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 46,899 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,10,725 பேர் காயமடைந்தனர்.

பல்வேறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போருக்கு எதிராக குரல் கொடுத்து வந்தன.

இந்த நிலையில் இரு தரப்பும் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைய கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும், தொடர்ந்து போர்நிறுத்தம் அமலுக்கு வரும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி முதல்நாளில் மூன்று இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் 95 பாலஸ்தீன பணய கைதிகளை விடுவிக்க வேண்டுமென இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

எனினும் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கவுள்ள மூன்று பணய கைதிகளின் பெயர்களை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை ஹமாஸ் இன்னும் நிறைவேற்றவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று காலை குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே போர் நிறுத்தம் திட்டமிடப்பட்டதிலிருந்து நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீராவின் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான சனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மூன்று மணி நேர தாமத்திற்கு பிறகு 3 இஸ்ரேலிய பெண் பிணைய கைதிகளான ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் மற்றும் எமிலி டமாரி ஆகியோரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்தது.

அதனை உறுதிசெய்த இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தம் மதியம் 2.45 மணி முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ளது. இதனை இரு தரப்புக்கும் மத்தியஸ்தராக செயல்படும் கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று காசா பகுதியில் இருந்து விடுவிக்கப்படவுள்ள 3 பணயக்கைதிகளின் பெயர்கள் இஸ்ரேலிய தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அந்த மூன்று பேரில் ஒருவர் ருமேனிய நாட்டவர், மற்றவர் பிரிட்டிஷ் நாட்டவர்.

அடுத்த ஏழு நாட்களில் மேலும் நான்கு பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். எனவே தற்போது முதல் போர் நிறுத்தம் தொடங்கிவிட்டது என்றும் கத்தார் அறிவித்துள்ளது.

இதனையடுத்து காசாவின் பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீன காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆறு வார போர் நிறுத்த கட்டத்தில், மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக திரும்பப் பெறுவதும், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

16 மாத போரில் காசாவில் பொதுமக்களுக்கான உணவு, உடை, இருப்பிடம் அடிப்படை வசதிகள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தத்தின் ஒவ்வொரு நாளும் உதவி பொருட்களை ஏற்றி வரும் 600 லாரிகள் மனிதாபிமான அடிப்படையில் காசாவிற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel