காசாவில் உள்ள பிரபல மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ள நிலையில், தாங்கள் இதனை நிகழ்த்தவில்லை என்று இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது காசாவில் உள்ள பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஹமாஸ் அமைப்பு கடந்த 7ஆம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல் காசாவை குறிவைத்து கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் கொடூர பதில் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.
இதில் நேற்றைய நிலவரப்படி காசாவில் உள்ள குழந்தைகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காசாவில் உள்ள அல் -அஹ்லி பாப்டிஸ்ட் (Al-Ahli Baptist) மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் அந்த மருத்துவமனை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இதனையடுத்து ஜோர்டான், துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா, லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் ஐநாவும் இஸ்ரேலின் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காசாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதேச மனிதாபிமான சட்டப்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்ரேல் – காசா இடையே உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதலை ஹமாஸ் “போர்க் குற்றம்” என்று குற்றம்சாட்டிய நிலையில், உலக சுகாதார நிறுவனமும் அதனை எதிரொலித்துள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம்!
எனினும் காசா மீதான தாக்குதலை தொடர்ந்துவந்த இஸ்ரேல், மருத்துவமனை மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை(ஐடிஎஃப்) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “IDF செயல்பாட்டு அமைப்புகளின் ஆய்வில், காசாவில் உள்ள அல் -அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு அருகாமையில் காசா பயங்கரவாதிகளால் சரமாரியாக ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எங்கள் கைகளில் உள்ள உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து மருத்துவமனையைத் தாக்கிய ராக்கெட் ஏவுதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்பதைக் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில், “காசாவில் உள்ள காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் தான் அப்பாவி குழந்தைகளை குறிவைத்து அஹ்லி மருத்துவமனையைத் தாக்கியவர்கள், ஐடிஎஃப் அல்ல” என்று கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கும், ”மருத்துவமனை தாக்குதலில் ஈடுபட்டது இஸ்லாமிய ஜிஹாத் ஏவுகணை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இதனை ’21 ஆம் நூற்றாண்டின் இரத்த அவதூறு’ என்று குறிப்பிட்ட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேலின் தாக்குதலை இதுவரை கண்டிக்காமல் செய்தி வெளியிட்டு வந்த ஊடகங்கள் மருத்துவமனை தாக்குதலுக்கு பிறகு தற்போது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
ஐநாவுக்கான பாலஸ்தீன தூதர் வெளியிட்டுள்ள செய்தியில், ”இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர். மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு இருப்பதாகக் கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக இஸ்ரேல் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அதன் நகல் எங்களிடம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம். பொய் கதைகளை அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று வருகை தர உள்ள நிலையில், காசா மருத்துவமனை மீதான இந்த தாக்குதல் இஸ்ரேல் – காசா இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’தளபதி’ விஜயின் லியோவை நள்ளிரவில் பாராட்டிய உதயநிதி: பின்னணி என்ன?
ஒரே நாளில் ரூ.360 உயர்வு: தங்க விலை நிலவரம்!