ஈஷா யோகா மையத்தின் மேல்முறையீட்டு வழக்கில், பெண் துறவிகளின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 18) உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் , ஈஷா மையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது இரண்டு மகள்கள் கோவை ஈஷா யோகா மையத்துக்கு யோகா கற்க சென்ற நிலையில் அங்கேயே தங்கிவிட்டனர். மேலும், தனது இரு மகள்களையும் ஆசிரமத்தினர் மூளைச் சலவை செய்து, துறவறம் ஏற்கச் செய்துள்ளதாகவும், தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை, சமூக நலத்துறைகளுக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், கடந்த அக்டோபர் 1, 2 ஆம் தேதிகளில் கோவை எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றினர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறை மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ஈஷா வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஈஷா வழக்கு இன்று (அக்டோபர் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனது வாதத்தில், ”தமிழக காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன, சத்குருவுக்கு எதிராக யாரோ சதி செய்கிறார்கள். இதில் தனியுரிமை மீறப்பட்டுள்ளது.
ஈஷாவில் உள்ள இரண்டு பெண் துறவிகளும் தானாக முன்வந்து தான் அங்கு வாழ்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என்று தந்தையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்” என வாதிட்டார்.
அப்போது காவல்துறை நிலை அறிக்கையின் 23-26 பாராவை குறிப்பிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “இரு பெண் துறவிகளும் உயர்நீதிமன்றத்தில் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அதன் பிறகு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் அவர்கள் எங்களிடம் பேசியுள்ளனர். மேஜரான பின்னர் தான் இருவரும் ஈஷாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள். இதனால் ஆட்கொண்டர்வு வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அது முடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது காமராஜின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ”ஆசிரமத்தில் மாதம் ஒருமுறை பிள்ளைகளை பார்க்க பெற்றோருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்” என கோரினார்.
அதற்கு சந்திரசூட், “அவர்கள் இருவரும் மேஜர். யாரையும் சந்திக்கும்படி அவர்களை வற்புறுத்த முடியாது. நீங்கள் தான் அவர்களது நம்பிக்கையை பெற வேண்டும்” என்றார்.
அதற்கு பெற்றோர் தரப்பில், “எங்களுக்கு 70 வயதாகிவிட்டது. எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் உள்ளதை தினசரி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இரவில் தூங்கும் போது எங்களது பிள்ளைகளுக்கும் சீண்டல்கள் நடப்பதாக கனவெல்லாம் வருகிறது. எனவே 10 நாட்களுக்கு ஒருமுறை காவல்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டது.
அதற்கு, “நீங்கள் அங்கு சென்று அவர்களைச் சந்திக்கலாம். ஆனால் காவல்துறையை அனுமதிக்க முடியாது.” என்று கூறி ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்த வழக்குகளின் விசாரணைக்கு எந்த தடையுமில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!