தடையை மீறி செயல்படுவதாக எழுந்த புகாரில், கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதுடன், தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட புகார்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது எழுந்தது.
மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில், கடந்த செப்டம்பர் மாதம் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும், நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையை தொடர்ந்து நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசு, அதன் அலுவலகங்களை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டது. இந்தநிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வேறு பெயரில் செயல்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லியில் இருந்து சென்று என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து கேரள மாநிலம் முழுவதும் 56 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பு எர்ணாகுளத்தில் உள்ள பெரியார் பள்ளத்தாக்கில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
பிஎஃப்ஐ கோட்டையாக இருந்த மற்ற மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவுகிறது.
கலை.ரா
8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்: ஏமாற்றத்தில் பயணிகள்!
விமானத்தில் இந்திய பயணிகளுக்கு இடையே மோதல்: வைரல் வீடியோ!