தாலியை கழற்றினால் விவாகரத்தா? தீர்ப்பின் உண்மை நிலவரம்!

Published On:

| By christopher

விவகாரத்து வழக்கில் தாலி குறித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாலி சங்கிலியை கழற்றுவது, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது

நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் சமூகத்தில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பிவிடும். அந்த வகையில் நேற்று விவகாரத்து வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஒருவர், மன ரீதியாக துன்புறுத்தி வரும் மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவில், ’என் மனைவி அரசு பள்ளி ஆசிரியாக உள்ளார். எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி, அவர் மனரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். எனவே, மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று (ஜூலை 15) உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ”பணியிடத்துக்கு சென்று கணவரை பற்றி அவதூறு பரப்பியது, மனரீதியாக அவரை துன்புறுத்துவதற்கு சமம். மேலும் வழக்கு விசாரணையின் போது, கணவரை பிரிந்ததும் தாலி சஞ்கிலியை கழற்றியது மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம். தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்ததும் தாலி சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல்” என்று கூறி கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியது. மனைவியின் தாலி சங்கிலி மட்டுமே திருமணத்தை உறுதிபடுத்தும் விஷயமஅல்ல என்றும், மனைவி தாலி அணிவதை சம்பிரதாயமாக குறிப்பிடும் நீதிமன்றம், கணவர்களுக்கு அப்படி எதுவும் இல்லாதது குறித்து ஏன் பேசுவதில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பார் அண்ட் பெஞ்ச் ஊடகம் விரிவான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கணவரின் பணியிடத்தில் ஆதாரமின்றி அவதூறு பரப்புவதை மட்டுமே மனரீதியாக துன்புறுத்தும் என்று நீதிமன்றம் கூறியது. மாறாக தாலி சங்கிலியை கழற்றுவது, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், அவதூறு பரப்ப தனது நிறுவனத்திற்கு தாலியுடன் வரும் மனைவி, அங்கிருந்து வெளியேறும்போது தாலியை கழட்டிவிடுவதாக கணவர் கூறினார். இதனை கருத்தில் கொண்ட நீதிபதிகள், தாலியின் முக்கியத்துவத்தை கூற கடந்த 2017ம் ஆண்டு வல்லபி விஆர் ராஜசபாஹி வழக்கில் ’தாலியை அகற்றுவது மனக் கொடுமை’ என்று சென்னை உயர் நீதிமன்றமே வழங்கிய பழைய தீர்ப்பினை சுட்டிக்காட்டினர். தாலியை அகற்றுவது திருமண உறவை முடிவுக்கு கொண்டு வரும் செயல் என்றோ, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்றோ கூறவில்லை. எனினும் கணவருக்கு ஏற்பட்ட மனரீதியான உளைச்சலையும், மனைவியின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் முன்வைத்து மட்டுமே விவகாரத்து வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பார் அண்ட் பென்ச்

கிறிஸ்டோபர் ஜெமா