வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை சாத்தியமா?… உலக நாடுகளின் வேலை நேரங்களை பாருங்க!

Published On:

| By Manjula

Is it possible to work 70 hours a week in India

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் இந்தியர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. Is it possible to work 70 hours a week in India

குறிப்பாக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கருத்துக்களே அதிகம் தென்படுகின்றன.  நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாக உள்ளது.  இதில், 70 மணி நேரம் வாரத்துக்கு வேலை செய்தால், வேலை இல்லாதவர்களின் நிலை மேலும் சிக்கலாகி விடும்.

பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் போராடி, பல்வேறு இழப்புகளை சந்தித்து தான் வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை பார்க்கும் சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது.

அப்படியிருக்க வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது நமது நாட்டை மீண்டும் 200 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என, இதுகுறித்து மக்கள் அச்சப்படுவதையும் அவர்கள் கருத்துக்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இப்போது இந்தியாவில் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற நிலை இருக்கிறது.

இதுவே வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றால் நாளொன்றுக்கு 11.5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அப்படி வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்களின் குடும்ப வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட கூடும். அதாவது 8 மணி நேரம் தூக்கம், 11.5 மணி நேரம் வேலை என்று வைத்து கொண்டால் கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 20 மணி நேரம் இதிலேயே சென்று விடும். மீதி இருக்கும் 4 மணி நேரம் என்பது வேலை செய்யும் இடத்துக்கான பயண நேரம், சாப்பாடு என கழிந்து விடும்.

பின்னர் தன்னுடைய குடும்பத்துடன்  ஒரு குறைந்தபட்ச நேரம் கூட  செலவழிக்க இயலாது. இது நம்முடைய சமூக கட்டமைப்பிலேயே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி விடும்.

வேலைக்கு செல்பவர்களும் அலுவலகம், வீடு என ஒரு இயந்திரம் போல இயங்கத் தொடங்கி விடுவார்கள். அதோடு அவர்களின் சமநிலை பெரிதும் பாதிக்கப்பட கூடிய அபாயமும் இதில் அதிகம் இருக்கிறது.

நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என்றாலும் கூட பெரும்பாலான நிறுவனங்களில் இதை சரியாக யாரும் பின்பற்றுவது இல்லை.

டார்கெட், வேலையை முடித்து விட்டே செல்ல வேண்டிய கட்டாயம் என இப்போதே  தங்களுடைய நிறுவனத்துக்காக பலரும் கூடுதல் நேரம் வேலை செய்துதான் வருகின்றனர்.

இதுவே 70 மணி நேரம் கட்டாயம் என்று வைத்து கொண்டால் அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும். இதில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். வீடு, வேலை என இரண்டையும் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான பெண்கள் உள்ளனர்.

இதில் வேலை நேரம் நீட்டிக்கப்பட்டால் அது குழந்தைகள் வளர்ப்பு, குடும்பம் என ஏகப்பட்ட பிரச்சினைகளை பெண்களின் வாழ்வில் உருவாக்கி விடும். எனவே இந்த 70 மணி நேர வேலை என்பது இந்தியாவுக்கு ஏற்ற ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

இதை பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமாக புள்ளி விவரங்களுடன் நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக வளர்ந்த நாடுகளின் வேலை நேரங்களை இந்த இடத்தில் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தரவுகளின் படி, உலக நாடுகளின் வேலை நேரங்களை இங்கே பார்க்கலாம்.  உலகில் குறைவாக வேலை நேரங்களை கொண்டுள்ள 7 நாடுகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி 24.7 மணி நேரங்களுடன் வனுவாட்டு முதல் இடத்தையும், 27.3 மணி நேரங்களுடன் கிரிபாட்டி 2-வது இடத்தையும், 28.6 மணி நேரங்களுடன் மொஸாம்பிக் 3-வது இடத்தையும், 28.8 மணி நேரங்களுடன் ருவாண்டா 4-வது இடத்தையும், 29.5 மணி நேரங்களுடன் ஆஸ்திரியா இந்த பட்டியலில் 5-வது இடத்தையும், 29.8 மணி நேரங்களுடன் எத்தியோப்பியா 6-வது இடத்தையும், 30.1 மணி நேரங்களுடன் சோமாலியா இதில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

உலகின் அதிக வேலை நேரம் உள்ள 10 நாடுகளை எடுத்து கொண்டோம் என்றால் இந்தியா அதில் 7-வது இடத்தில் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 52.6 மணி நேரத்துடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. காம்பியா 50.8 மணி நேரத்துடன் 2-வது இடத்திலும், பூடான் 50.7மணி நேரங்களுடன் 3-வது இடத்திலும், லெசோதோ 49.8 மணி நேரத்துடன் 4-வது இடத்திலும், காங்கோ 48.6 மணி நேரத்துடன் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்த வரிசையில் 48 மணி நேரங்களுடன் கத்தார் 6-வது இடத்திலும், இந்தியா 47.7 மணி நேரங்களுடன் 7-வது இடத்திலும் உள்ளது. முறையே மரிட்டானியா 47.5 மணி நேரங்களுடன் 8-வது இடத்திலும், லிபெர்யா 47.2 மணி நேரங்களுடன் 9-வது இடத்திலும் வங்காள தேசம் 46.9 மணி நேரங்களுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

வளர்ந்த நாடுகளான ஜப்பானில் வாரத்துக்கு வேலை நேரம் 37 மணி நேரம் உள்ளது. ஜெர்மனியில் இது 34 மணி நேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் 36.4 மணி நேரமாகவும், இங்கிலாந்தில் 35.9 மணி நேரமாகவும், சீனாவில் 46 மணி நேரமாகவும், சிங்கப்பூரில் 42.6 மணி நேரமாகவும் உள்ளது. அண்டை நாடுகளான இலங்கையில் 36 மணி நேரமாகவும், நேபாளத்தில் இது 40 மணி நேரமாகவும் உள்ளது. இந்தியாவில் சராசரி வேலை நேரம் 48 மணி நேரமாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளை எடுத்து கொண்டோம் என்றால் சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளில் வேலை நேரம் 36.3 மணி நேரமாகவும், இத்தாலி, பிரான்சில் 36.2 மணி நேரமாகவும், அயர்லாந்தில் 36 மணி நேரமாகவும், சுவீடனில் 35.9 மணி நேரமாகவும், லூக்ஸம்பார்க்கில் 35.5 மணி நேரமாகவும், பின்லாந்து மற்றும் பெல்ஜியமில் 34.9 மணி நேரமாகவும், ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் 34.6 மணி நேரமாகவும், நார்வேயில் 34.1 மணி நேரமாகவும், ஆஸ்திரியாவில் 33.7 மணி நேரமாகவும், நெதர்லாந்தில் 32.4 மணி நேரமாகவும் இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை வைத்து பார்த்தோம் என்றால் இந்தியாவின் வேலை நேரத்தை குறைக்க வழிகள் எதுவும் இருக்கிறதா? என்பதை பார்க்கலாமே தவிர அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. Is it possible to work 70 hours a week in India

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel